சிறப்புச் செய்தி

டெல்லியில் பரபரப்பு: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பிரபல யூடியூபர் துருவ் ரதீ கைது!

13 hours ago 17 பார்வைகள்
டெல்லியில் பரபரப்பு: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பிரபல யூடியூபர் துருவ் ரதீ கைது!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எழுந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்ட போதிலும், நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் ஜனநாயகத்தைக் காக்கக் கோரி களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் துருவ் ரதீ, சமீபத்தில் இந்தியா வந்து குருகிராமில் உள்ள தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். தலைநகர் டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தில் அவர் பங்கேற்கக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில், டெல்லி மற்றும் குருகிராம் காவல்துறையினர் இணைந்து நள்ளிரவு மற்றும் காலை நேரங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, குருகிராம் செக்டார் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரைத் தடுத்துக் கைது செய்தனர்.

தலைநகரில் சட்டம்-ஒழுங்கைப் பேணுகின்ற வகையிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாகவும் கூறி காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டத்திற்குப் மறுக்கப்பட்டிருந்த நிலையிலும், அதனை மீறி போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்ற பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபல யூடியூபர் துருவ் ரதீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக் களத்தை ஒட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்