கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் சனந்த மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதையடுத்து டோரதி திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
டோரதி திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை வெகுவாக பாராட்டினர். டோரதியை பார்த்த நடிகர் தனுஷ் ஒரு தலைசிறந்த படைப்பு என பாராட்டினார்.
மேலும், இசைஞானியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு உக்கிரமான ருத்ரதாண்டவம் என டோரதி திரைப்படத்தின் பின்னணி இசையை நடிகர் தனுஷ் பாராட்டினார்.
இதையடுத்து இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் டோரதி திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர்.
இந்த நிலையில் டோரதி திரைப்படத்தின் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இந்த பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் சுப்பராஜ், தலைவா, அற்புதம், அழகு, பிரமிக்க வைக்கிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த பதிவில், ரஜினிகாந்த் டோரதியை மிகவும் விரும்பியதாகவும், படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி ஒரு மணி நேரம் விரிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர், இதைவிட என்ன வேண்டும், அந்த உரையாடலையும், அவர் சொன்ன ‘இந்த கார்த்திக் சுப்பராஜாவை தான் தேடிட்டு இருந்தேன்’ என்று கூறியதையும் பதிவிட்டுள்ளார்.
இறுதியில், தலைவா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், லவ் யூ தலைவா என்றும் கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டுள்ளார்.