சிறப்புச் செய்தி

எனது பாட்டி மறைவு குறித்த போலீசாரின் வீடியோ எடிட் செய்யப்பட்டது: அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு

11 hours ago 17 பார்வைகள்
எனது பாட்டி மறைவு குறித்த போலீசாரின் வீடியோ எடிட் செய்யப்பட்டது: அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் வந்த தீப்கே, விமானத்தில் வைத்து காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தீப்கே, நாட்டில் ஓராண்டிற்கு அமைதியை காக்கும்படி நீதிமன்ற நிபந்தனையுடன் காவல்துறை விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து சிறையில் இருந்த தீப்கேவிடம் அவரின் பாட்டியின் மறைவு செய்தி குறித்து காவல்துறை தகவல் தெரிவிக்கவில்லை என இணையத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு ஒரு அறையில் அமர்ந்திருந்த தீப்கேவிடம், காவலர்கள் பேசுவது போன்ற காணொளி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் தீப்கேவிற்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, தீப்கே பாட்டியின் மறைவுக்கு காவலர் இரங்கல் தெரிவிப்பது பதிவாகியுள்ளது.

மேலும் மற்றொரு காவலர் தீப்கேவிடம், நீங்கள் வீட்டிற்கு திரும்ப விரும்புகிறீர்களா என்று கேட்பதும், உங்களுக்கு காவல்துறை தரப்பில் இருந்து பேருந்து அல்லது விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.

அதற்கு தீப்கே, நான் இங்கேயே இருப்பேன் என கூறி, காவலருக்கு மறுப்பு தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.

இதையடுத்து டெல்லி காவல்துறையால் வெளியிடப்பட்ட காணொளி திருத்தப்பட்டது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தீப்கே அளித்த பேட்டியில், “கைது செய்யப்பட்ட பிறகோ அல்லது காவலில் வைக்கப்பட்ட பிறகோ ஒருவர் தனது வழக்கறிஞரை தொடர்பு கொள்ள அனுமதிப்பது ஒரு சட்டப்பூர்வ உரிமை.

டெல்லி காவல்துறை எனக்கு அதை கூட அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தார்மீக ரீதியாக உயர்ந்த நிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.

நான் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்தேன் என்றோ, எந்த காவல் நிலையத்தில் இருந்தேன் என்றோ, அல்லது எங்கு அழைத்து செல்லப்பட்டேன் என்றோ அவர்கள் எனக்கோ, என் பெற்றோருக்கோ என் வழக்கறிஞர்களுக்கோ சொல்லவில்லை. நாள் முழுவதும் அவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

அதிகாலை 3.30 மணிக்கு, ஏற்கனவே என் பாட்டியை இழந்திருந்த என் பெற்றோரை நான் அழைத்து, அவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுமென்றே விரும்பினார்கள்.

அவர்களுடைய மகன் நீண்ட காலம் சிறையில் இருக்கப் போகிறான் என்று சொல்லி, நான் அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுக்க விரும்பவில்லை.

டெல்லி காவல்துறை என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தையும் மனரீதியாக துன்புறுத்தியது. நான் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்தேன் என்பதை டெல்லி காவல்துறை என் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை.

என் பெற்றோரிடம் பேசுமாறு அவர்கள் என்னிடம் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நான் எந்த சிறையில் அல்லது காவல் நிலையத்தில் இருந்தேன் என்பதை அவர்கள் என் பெற்றோரிடம் தெரிவித்தார்களா? அவர்கள் தெரிவிக்கவில்லை என்றால், ஏன் தெரிவிக்கவில்லை? அவர்களுக்கு மனிதாபிமானமே இல்லையா?” என்று தீப்கே கூறினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்