சிறப்புச் செய்தி

மிரட்டலுக்கு பயந்தவர் மாணிக்கம் தாகூர் அல்ல... திருப்பி அடிப்பவர் - திமுக எச்சரிக்கைக்கு காங்கிரஸ் பதில்!

9 hours ago 16 பார்வைகள்
மிரட்டலுக்கு பயந்தவர் மாணிக்கம் தாகூர் அல்ல... திருப்பி அடிப்பவர் - திமுக எச்சரிக்கைக்கு காங்கிரஸ் பதில்!

மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதைக் கண்டித்து அண்மையில் திமுக தலைமை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டது.

கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும் இல்லையென்றால் அடக்கப்படும என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் மீதான திமுகவின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கமிட்டி பதிலளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

எங்கெல்லாம் தேர்தல் முறைகேடுகள் குறித்த உறுதியான, தீர்மானகரமான ஆதாரங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தேவைப்பட்டால் மறுதேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சூழல்களையும், பீகார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் எழுந்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களை ஆராயாமல் ஒன்றாகச் சேர்த்துப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல.

ஆதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ, நடவடிக்கையும் அங்கே இருக்க வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை உண்மையாகச் சித்தரிக்கக் கூடாது.

SIR நடவடிக்கையின்போது தி.மு.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உதவியதையும், வாக்குகளைப் பாதுகாக்கக் களத்தில் பணியாற்றியதையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்.

அந்தப் பணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. தொண்டர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியதே.ஆனால், அதே நேரத்தில், அந்தப் பணியைச் சுட்டிக்காட்டி SIR தொடர்பான மோசடிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் திமுக தடுத்துவிட்டதாகக் கூறினார்.

அன்று தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டியபோது SIR குறித்து ஒரு நிலைப்பாடு; இன்று கேள்வி எழுப்பப்படும்போது வேறொரு நிலைப்பாடா? இதைத் தெளிவுபடுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு.

இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு ஆபாசமான தனிநபர் தாக்குதல்கள்? ஏன் வன்முறைப் பேச்சு? இந்த மிரட்டல்களுக்கு பயந்தவர் அல்ல எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள். திருப்பி அடிக்க தெரிந்தவர்.

கருத்துக்குக் கருத்தால் பதிலளியுங்கள்; உண்மைக்குப் பொய்யால் பதிலளிக்காதீர்கள் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்றால், ஆதாரங்களை முன்வைத்து விவாதியுங்கள். ஆனால், அரசியல் விமர்சனத்தைத் தனிப்பட்ட அவதூறாக மாற்றுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உதயநிதி நடிப்புலின் தலைமையிலான தி.மு.க. அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து இத்தகைய தரம் தாழ்ந்த மொழிக்குக் கொண்டுசெல்வது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு நல்லதல்ல.

எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பும் கேள்விகளுக்குபதில் சொல்ல வேண்டுமே தவிர, அவரை மிரட்டலாம் என்று கற்பனை செய்வது மூலமாகவோ, இழிவுபடுத்துவதன் மூலமாகவோ உண்மையின் குரலை அடக்கிவிட முடியாது.

ஜனநாயகத்தைக் காப்பது எங்கள் கடமை. ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. உண்மைகளைப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது.

தி.மு.க.வுக்கு மீண்டும் கேட்கிறோம்: உண்மைகளை எதிர்கொள்ளத் தயாரா? அல்லது கேள்வி கேட்பவர்களை தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாசப் பேச்சின் மூலமாக மௌனமாக்க முடியும் என்று நினைப்பது தான் உங்கள் அரசியலா?

என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்