ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், கணவரம் விமான நிலையம் வந்திறங்கினார். அவருக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் நேரில் சென்று உற்சாக வரவேற்பளித்தனர். ஆந்திர அரசின் சார்பில் பாரம்பரிய செண்டை மேளங்கள் முழங்கவும், தாரை தப்பட்டைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த உயர்மட்டப் பயணத்தின் போது தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த முக்கிய இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் மேலாண்மை மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின் கீழ் சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரைத் தடையின்றி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கண்டலேறு மற்றும் சோமசீலா அணைகளில் இருந்து கிடைக்கக்கூடிய நீர் இருப்பைக் கொண்டு, தமிழகத்திற்குத் தேவையான நீரை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் இரு முதல்வர்களும் முக்கியக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஆதவ் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரும் ஆந்திர முதல்வரை சந்தித்து பேசினர். தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்தப் பயணம், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவைப் பேணுவதோடு, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.