இந்தியா தான் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முடக்கி, தங்களின் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாகப் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் சர்வதேச அளவில் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தத் தட்டுப்பாட்டிற்குப் பாகிஸ்தானின் சொந்த நிர்வாக சீர்கேடே காரணம் என்பது அந்நாட்டு அரசு அறிக்கையின் மூலமாகவே தற்போது அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தானில் அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை நீடிக்கும் இந்த ரபி பருவத்தில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறைக்கு இந்தியாவின் நடவடிக்கை காரணமல்ல; மாறாகப் பின்வரும் உள்நாட்டுப் பிரச்சினைகளே காரணம் என IRSA தெரிவித்துள்ளது.
தார்பெலா அணையின் சுரங்கப்பாதை-4 மற்றும் சுரங்கப்பாதை-5 நீர்மின் திட்டப் பணிகள் மார்ச் 2025-க்குள்ளேயே முடிந்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் மின்சார வாரியத்தின் மந்தமான செயல்பாட்டால் இத்திட்டங்கள் இன்னும் முடிவடையாமல் முடங்கிக் கிடக்கின்றன.
இந்தத் திட்டப்பணிகளின் தாமதம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, தார்பெலா அணையில் மட்டும் 3 மில்லியன் ஏக்கர்-அடி தண்ணீரைச் சேமிக்க முடியாமல் வீணாகியுள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அணைகளில் 27% குறைவான தண்ணீரே இருப்பு உள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 'காரிஃப்' பருவத்தில் நதிகளுக்கான நீர்வரத்து, எதிர்பார்த்ததை விட 8 சதவீதமும், கடந்த ஆண்டை விட 22 சதவீதமும் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2025-ல் ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து, பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையைத் தொடங்கியது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது என்பது வழக்கமான நதிநீர் தரவுப் பகிர்வு மற்றும் முன்னறிவிப்புகளை நிறுத்துவதைக் குறிக்குமே தவிர, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தவில்லை. நதிகள் எப்போதும் போல இயல்பாகவே எல்லையைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விவசாயத்தில் 80 சதவீதத்திற்கும் மேல் சிந்து நதிப் படுகையை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டே அங்கு சுமார் 20 லட்சம் டன் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டு, வெளிநாடுகளில் இருந்து 10 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
தற்போது நிலவும் 22% கூடுதல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தானின் நெற்களஞ்சியமாக விளங்கும் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், தங்களின் சொந்தத் தவறுகளை மறைக்கப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்-ஷெரீப் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர், "இந்தியா தண்ணீரைத் திசைதிருப்ப முயன்றால் அது போர்ப் பிரகடனமாகத் கருதப்படும்" என சர்வதேச மேடைகளில் அரசியல் நாடகம் ஆடி வருகின்றனர்.