தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்பட பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இது மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்கும் நிலையில் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்திருப்பதாக பத்திரிகையில் நேற்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. இதனையடுத்து தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். விலை உயர்வை கட்டுப்படுத்தவும் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 201 கூட்டுறவு ரேஷன் கடைகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் 25 ஆயிரம் டன் சன்னரக அரிசி கிலோ ஒன்று ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப 5 கிலோ வரை இவ்வார இறுதியில் இருந்து வழங்கப்படும்.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சன்னரக அரிசி வரத்து, 'எல்-நினோ' தாக்கத்தால் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தையில் அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.
இதனை சீர்செய்யும் நோக்கில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து 500 டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, 250 அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.130 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அமுதம் மற்றும் கூட்டுறவுத்துறை அங்காடிகள் மூலம் தற்போது புழுங்கல் பொன்னி அரிசி ரூ.60, துவரம் பருப்பு ரூ.130, உளுந்தம் பருப்பு ரூ.140, பூண்டு ரூ.240, மல்லி (தனியா) ரூ.240 மற்றும் மிளகாய் ரூ.330 என சந்தை விலையைவிடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.