டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி போராட்டம் முயன்ற போது, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து டெல்லி சென்ட்ரல் பார்க்கில் தேசிய கொடியுடன் சிஜேபி ஆதரவாளர்கள் கூடுமாறு, அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.
சிஜேபி அறிவித்த போராட்டத்திற்கு எதிராக வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹத்ராய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் அவர் அந்த மனுவில், கன்னாட் பிளேஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் இடையூறுகளால் ஒரு நாளைக்கு ரூபாய் 250 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாக கூறினார்.
வியாழக்கிழமை இரவு தாமதமாக சென்ட்ரல் பார்க்கை மூட உத்தரவிட்டு புது தில்லி மாநகராட்சி (NDMC) வெளியிட்ட அறிவிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கட்டுப்பாடுகள் அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களையும் தினக்கூலி தொழிலாளர்களையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்த அறிவித்துள்ள கூட்டம் தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து வர்த்தகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, போராட்டக்காரர்கள் வேறு ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள் என தாங்கள் நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் போராட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளால் வணிகர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்ச்சரித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் கூறுகையில், “அனைவருக்கும் நல்லறிவு மேலோங்கும் என நம்புகிறோம். சிறு கடைக்காரர்கள் இந்த நாட்களில்தான் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள்.
ஒட்டுமொத்த குடும்பங்களும் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும், சிரமங்களையும், நெருக்கடிகளையும் நாங்கள் அறிவோம், என்று சிறு வணிகங்களின் பண்டிகைக் கால முக்கியத்துவத்தை குறிப்பிட்டு தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், வியாபார இழப்பு ஏற்பட்டாலோ, அது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமானதாக இருந்தாலோ, அரசியலமைப்புக்கு உட்பட்ட சிவில் வழக்கு அதிகார வரம்பின் கீழ் எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவோம்.
இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை தசரா விடுமுறைக்கு பிறகு, அக்டோபர் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.