தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) பணிகளில் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, அவர் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக சிஜேபி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜந்தர் உள்ளிட்ட சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக டெல்லி காவல்துறை அறிவித்தது.
இதையடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்று, நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக கூறி, சிஜேபி முக்கிய உறுப்பினர்களான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் நேற்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கேவும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் சிஜேபி மீதான அடக்குமுறைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இந்த ஆட்சியை வீழ்த்த விரும்புகிறோம். இந்த நாட்டில் ஜனநாயக முறையிலேயே அதை வீழ்த்துவோம்.
நாங்கள் நேபாளம் அல்ல, நாங்கள் வங்கதேசம் அல்ல, எங்களிடம் அம்பேத்கர் இருக்கிறார், எங்களிடம் காந்தி இருக்கிறார், எங்களிடம் பகத் சிங் இருக்கிறார், எங்களிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது, எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.
நீங்கள் எங்களுடன் பேசாததால் எங்களை தள்ளிவிட்டீர்கள். நீங்கள் வன்முறையை பயன்படுத்துகிறீர்கள்.
நாங்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல. அரசியலமைப்பு சட்டமே எங்கள் ஆயுதம். போராட்டம் நடத்தும் உரிமையே எங்கள் ஆயுதம்.
மோடிஜியிடம் நான் கேட்கிறேன், உங்கள் 'ஹர் கர் மூவர்ண முழக்கத்திற்கு என்ன ஆனது? இந்த நாட்டின் இளைஞர்கள் மூவர்ணக் கொடியுடன் நடக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், உத்தரப் பிரதேசம் முதல் 2029 மக்களவைத் தேர்தல் வரையிலான தேர்தல் போராட்டத்தை குறித்தும் விவரித்தார்.
மேலும், போராட்டக்காரர்களை தடுக்க, மத்திய அரசு வன்முறையை பயன்படுத்துவதாகவும் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டினார்.
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மறுத்ததே, அதனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வலு சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் அமைதியான போராட்டங்களும், தேர்தல் மாற்றத்திற்கான கோரிக்கைகளும் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்துக்களை நிராகரித்த அவர், குடிமக்கள் கேள்வி எழுப்பவும், ஆர்ப்பாட்டம் செய்யவும், வாக்களிக்கவும் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு மக்களை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை செய்கிறார். ஆனால் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த மூவர்ணக் கொடி பேரணிக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் பிரகாஷ் ராஜ் கூறினார்.
பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புமாறு எதிர்க்கட்சிகளை அவர் வலியுறுத்தினார்.
குடிமக்கள் அமைதியான தெரு போராட்டங்களை தொடர்வார்கள் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகள், சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் ஆதரவை சுட்டிக்காட்டிய பிரகாஷ் ராஜ், போராட்டங்களின் அடுத்தகட்டத்தில் பெருந்திரளான மக்கள் வீதிகளுக்கு வரக்கூடும் என்று கூறினார்.