சிறப்புச் செய்தி

கலைமகளின் அருளை தரும் சரஸ்வதி பூஜை

15 hours ago 16 பார்வைகள்
கலைமகளின் அருளை தரும் சரஸ்வதி பூஜை

இந்து சமயத்தில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையுடன் இணைந்தே ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது.

கல்வி, கலை மற்றும் ஞானத்தின் அதிபதியாக கருதப்படுபவர், சரஸ்வதி தேவி. சரஸ்வதி பூஜையன்று, கலைகளில் சிறந்து விளங்கவும், ஞானம் வேண்டியும், நினைவாற்றல் வலுப்பெறவும், படிப்பில் அதிக கவனம் செலுத்தவும் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபாடு செய்கின்றனர்.

சில புராணங்களின்படி, இந்த நாளில்தான் சரஸ்வதி தேவி மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், ஆயுதங்கள் புனிதமானவையாக கருதப்பட்டு, மக்கள் அதை வழிபட தொடங்கினர்.

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது முன்னோர் வாக்கு. ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நாம் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே தான், நாம் செய்யும் தொழிலை போற்றும் வகையில், தொழிலில் பயன்படுத்தும் கருவிகள் இறைவனின் முன்னால் வைத்து வழிபடப்படுகிறது. இதனால்தான் இந்நாள் 'ஆயுத பூஜை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மகாபாரதத்தில் ஆயுத பூஜையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்கள், சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தோல்வியுற்று, தங்கள் நாட்டையும், உடமைகளையும் இழந்தனர். மேலும் 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அஞ்ஞாத வாசம் என்பது யாரும் அறியாதபடி மாறுவேடத்தில் மறைந்து வாழ்வது ஆகும்.

12 ஆண்டுகள் வனவாசத்தை முடித்த பஞ்சபாண்டவர்கள், அஞ்ஞாத வசம் இருக்க திட்டமிட்டனர். பஞ்சபாண்டவர்கள், தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்தனர். யட்ச ராஜன் வரத்தால் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் தங்கள் உருவத்தை மாற்றிக்கொண்டு, மத்ஸ்ய தேசத்து விராட மகாராஜாவிடம் பணியாட்களாக வாழ்ந்து வந்தனர்.

பஞ்சபாண்டவர்கள் விராட தேசத்தில் இருப்பதை அறிந்த துரியோதனன், அந்நாட்டை தாக்க திட்டமிட்டான். இதையடுத்து பாண்டவர்கள், வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்து பூஜை செய்தனர். பின்னர், துரியோதனுடன் போரிட்டு வெற்றியும் பெற்றனர். அந்த தினமே 'ஆயுத பூஜை' என்றும், 'அஸ்திர பூஜை' என்றும் அழைக்கப்படுகிறது.

பின்னர் விஜயதசமி நாளில் திரும்பி வந்து வன்னி மரத்தை வணங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் சில பகுதிகளில் ஆயுதபூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று, வன்னி மரத்துக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தினமான இன்று வீட்டை தூய்மை செய்து, தோரணம் கட்டி, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில் சரஸ்வதி தேவியின் உருவ படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். மாணவர்கள், தங்கள் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றையும், தொழில் செய்பவர்கள் தங்களுக்கு உதவும் ஆயுதங்களையும், இயந்திரங்களையும் அன்னையின் பாதத்தில் வைத்து வழிபடுவர்.

இலையில் அவல், பொரி, பழங்கள் வைத்தும், பால் பாயசம், சுண்டல், பொங்கல் நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம். அன்னைக்கு கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பூஜையின்போது, வீட்டில் உள்ள அனைவரும் சகலகலாவல்லி மாலை போன்ற சரஸ்வதி தேவிக்குரிய பாடல்களை பாராயணம் செய்து வணங்கலாம். அன்றைய தினம் ஏழை எளிய குழந்தைகளுக்கு இயன்ற அளவு நோட்டு புத்தகம், பேனா போன்ற கல்வி சார்ந்த பொருட்களை தானமாக வழங்கலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி அடையவும் சரஸ்வதி பூஜை அன்று கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை பூஜை செய்து வழிபட வேண்டும். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்