மத்திய மந்திரியாக இருந்த தமிழக பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாரதிய ஜனதாவின் தமிழக அரசியல் பணிகளில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய மந்திரி பதவி இல்லாத நிலையில் தற்போதைய தமிழக பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய மந்திரியாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக நடிகர் சரத்குமார் மாநில தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நயினார் நாகேந்திரன் திடீரென 20 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக பாரதிய ஜனதா தலைவராக நான் நியமிக்கப்படலாம் என்ற செய்திகளை பத்திரிகை வாயிலாக தான் பார்த்தேன். பா.ஜ.க. தலைமை எனக்கு தகவல் கொடுத்து நீங்கள் மாநில தலைவராக இருக்க வேண்டும் என்று சொன்னால் அது குறித்து முடிவு சொல்லலாம். இப்போது எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை.
த.வெ.க. அரசுக்கு இது ஹனிமூன் காலம். தமிழக முதலமைச்சர் விஜய் 6 மாதம் அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார். புதிதாக யார் வந்தாலும் என்ன நடக்கிறது என்ன ‘பைல்’ நகர்கிறது என தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இது குறித்து நான் கருத்து சொல்லும் நிலையில் இல்லை. நான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவோ, மத்திய மந்திரியாக இருந்தாலோ அது பற்றி கருத்து சொல்லலாம்.
எல்லாவற்றையும் நன்றாக புரிந்து பார்த்து விட்டு அதற்கடுத்து முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும். இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுப்பதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.