சிறப்புச் செய்தி

எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட சந்திப்பா? ஹர்தீப் சிங் புரியின் புகைப்படங்களால் புதிய சர்ச்சை!

9 hours ago 24 பார்வைகள்
எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட சந்திப்பா? ஹர்தீப் சிங் புரியின் புகைப்படங்களால் புதிய சர்ச்சை!

அமெரிக்காவில் பெரும் பணக்காரராகவும், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கில் தொடர்புடைய புதிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

"எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்" கீழ் கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வரும் இந்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் மத்திய அமைச்சரும் அப்போதைய வெளியுறவுத் துறை அதிகாரியுமான ஹர்தீப் சிங் புரி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்துள்ள தகவல்களும் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னதாக எப்ஸ்டீன் விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டபோது விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தான் சர்வதேச அமைதிக்கான தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்த காலக்கட்டத்தில் அக்குழுவுடன் சேர்ந்துதான் எப்ஸ்டீனை மூன்று அல்லது நான்கு முறை சந்தித்ததாகத் தெரிவித்திருந்தார். பொது வாழ்வில் இருப்பவர்கள் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்திப்பது இயல்பு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்போது அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள புதிய பக்கங்களில், ஹர்தீப் சிங் புரி தூதுக் குழுவின்றி எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட முறையில் அமர்ந்து ஆலோசனை செய்யும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தனிப்பட்ட சந்திப்பு குறித்த புதிய படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளன.

தூதுக் குழுவுடன் மட்டுமே சந்தித்ததாக ஹர்தீப் சிங் புரி முன்னர் கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தனிநபர் சந்திப்புப் புகைப்படங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரக் கேள்விகளை எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் உள்ளிட்ட பல தலைவர்கள், எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததே இல்லை என்று கூறிவிட்டு இப்போது இந்தப் புகைப்படங்களுக்கு என்ன அர்த்தம் என்று கடுமையாகச் சாடியுள்ளனர்.

மேலும், எப்ஸ்டீன் இருந்த அதே அறையில் வேறு சில பெண்களுடன் உள்ள புகைப்படங்களும் வெளியாகி இருப்பதால், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உடனடியாகப் பொதுமக்களுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் அழுத்தமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்