சிறப்புச் செய்தி

பார்முலா 1 கார் பந்தயம்.. US கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி - உலக சாம்பியன் ஆகும் 20 வயது வீரர்?

1 hour ago 7 பார்வைகள்
பார்முலா 1 கார் பந்தயம்.. US  கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி - உலக சாம்பியன் ஆகும் 20 வயது வீரர்?

யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் (USGP) என்பது அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பிரபலமான பார்முலா 1 (F1) கார் பந்தயங்களில் ஒன்றாகும்.

2012 ஆம் ஆண்டு முதல் இந்த பந்தயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் உள்ள சர்க்யூட் ஆப் தி அமெரிக்காஸ் ஓடுதளத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டின் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நேற்று (அக்டோபர் 25) அங்கு நடைபெற்றது.

இதில் இத்தாலியை சேர்ந்த மெர்சிடிஸ் (Mercedes) அணியின் இளம் வீரர் கிமி ஆண்டோனெல்லி (20) முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

ஃபெராரி (Ferrari) அணி வீரர் சார்லஸ் லெக்லெர்க் இரண்டாம் இடம் பிடித்தார். ரெட் புல் (Red bull) அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த பந்தயத்தில் சாம்பியன் ஆனதை தொடர்ந்து உலக சாம்பியன் ஆகும் இலக்கை அவர் நெருங்கியுள்ளார்.

ஒரு சீசனில் உள்ள அனைத்து பந்தயங்களின் முடிவிலும் யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்களுக்கே உலக சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

தற்போதைய நிலையில் கிமி ஆண்டோனெல்லி சாம்பியன் ஆவதற்கு வரும் நவம்பர் 1 அன்று நடைபெறவிருக்கும் மெக்சிகோ கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் அவர் 9வது இடத்தை பிடித்தாலே போதுமானது.

எனவே 2026 ஆம் ஆண்டின் பார்முலா 1 உலக சாம்பியனாக அவர் முடிசூடும் வாய்ப்பு கிமிக்கு பிரகாசமாக உள்ளது.

பார்முலா 1 வரலாற்றிலேயே மிக இளவயதில் உலக சாம்பியன் பட்டத்தை வெல்பவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்