அசாம் மாநிலம் ஸ்ரீபூமி (முன்னாள் கரீம்கஞ்ச்) பகுதியில் உள்ள பெங்காலி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பராக் பள்ளத்தாக்கு பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு நடனமாடச் சென்ற 11 பேர் கொண்ட பிஹு நாட்டுப்புற நடனக் குழுவினர் மீது சிலரால் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது அசாமி மொழியில் பாடல்கள் ஒலிக்கப்பட்டதை எதிர்த்து இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் திடீர் தாக்குதலில் பிஹு நடனக் கலைஞர்கள் காயமடைந்ததோடு, அவர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளும் சேதப்படுத்தப்பட்டு அல்லது பறிக்கப்பட்டு உள்ளன. அசாமின் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியக் குறியீடான பிஹு கலை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இப்பகுதியில் பல தசாப்தங்களாக நிலவி வரும் மொழி சார்ந்த பிளவுகள் மற்றும் பதற்றங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தவும், பராக் மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தைக் பாதுகாக்கவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், முதல் கட்டமாகக் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.