சிறப்புச் செய்தி

சிறையில் அன்பில் மகேஷ்... போலீசாரின் அடுத்தக்கட்ட மூவ்... புழலுக்கு விசிட் அடித்த உதயநிதி

1 hour ago 11 பார்வைகள்
சிறையில் அன்பில் மகேஷ்... போலீசாரின் அடுத்தக்கட்ட மூவ்... புழலுக்கு விசிட் அடித்த உதயநிதி

கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகியும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரச குமார் கைது செய்யப்பட்டார்.

அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைதானார்கள். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வேகமெடுத்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிப்பதற்காக பி.டி.அரசகுமார் மற்றும் அவரது உறவினர்கள் மூலமாக ரூ.100 கோடி வரையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ரூ.400 கோடி வரையில் பணம் வசூலிக்கப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் மீது பி.என்.எஸ். 316 (5), 318 (4), 3 (5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அன்பில் மகேசிஷிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்கள். அவரது வீடுகளிலும் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் முன் ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு, நேற்று தள்ளுபடியானது. இதைத்தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள வக்கீல் வில்சன் அலுவலகத்தில் வைத்து அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்தார்.

அப்போது அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். நேற்று மாலை 3 அளவில் அவர் கைது செய்யப்பட்டது தி.மு.க.வினர் மத்தியில் காட்டுத்தீயாக பரவியது.

இதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் தி.மு.க.வினர் பலர் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டனர். தி.மு.க. வக்கீல்களும் அங்கு வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணை முடிந்து அன்பில் மகேஷ் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

பரிசோதனை முடிந்ததும் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அன்பில் மகேசை போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு தி.மு.க. தொண்டர்களோடு கூடி இருந்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் எல்லாம் சேர்ந்து பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறீர்களா? என்று ஆவேசத்துடன் அவர் கேள்வி எழுப்பினார். தி.மு.க.வினரும் அப்போது போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இதன் பிறகு 10 மணி அளவில் சென்னை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு 2 மணி நேரம் அன்பில் மகேஷ் தரப்பு வக்கீலுக்கும், அரசு தரப்பு வக்கீலுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அன்பில் மகேசிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவரை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிடக் கூடாது என்று மூத்த வக்கீல் வில்சன் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், அன்பில் மகேசை கைது செய்வதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் மேலும் அவரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும், எனவே சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்ய மூர்த்தி அன்பில் மகேசை அடுத்த மாதம் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் அழைத்து செல்லப்பட்ட அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இரவு 10 மணியில் இருந்து 12 மணி வரை சுமார் 2 மணி நேரம் கோர்ட்டில் இருதரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தி.மு.க. வக்கீல் சரவணன் வாதிடும் போது, அன்பில் மகேசை மூத்த வக்கீல் அலுவலகத்தில் வைத்து கைது செய்துள்ளனர் என்றும் இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.

மூத்த வக்கீல் வில்சன் வாதிடும்போது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து எனது அலுவலகத்துக்கு அன்பில் மகேஷ் வந்திருந்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து கொண்டிருந்தோம். அவர் கைது செய்யப்பட்டதில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதன் பின்னரும் தொடர்ந்து மூத்த வக்கீல் வில்சன் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ஏற்கனவே அன்பில் மகேஷிடம் செப்டம்பர் மாதம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அவர் ஒன்றும் தீவிரவாதி இல்லை. முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதும், உடனடியாக அன்பில் மகஷை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? போலீஸ் ராஜ்ஜியமா நடக்கிறது? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறும் போது, போலீசார் எனது அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகமாக கைது செய்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், போலீசார் அன்பில் மகேசை அலுவலகத்துக்கு வெளியில் 1 மணி நேரம் காத்திருந்து அதன் பிறகே கைது செய்தனர் என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து வாதிடும் போது, ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அதுபற்றி மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் கூறினார்.

ஜாமீன் வழங்கினால் அன்பில் மகேஷ் சாட்சியங்களை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் வாதிட்ட வில்சன் முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னரிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும், ஊழல் தடுப்பு சட்ட விதிகளின் படி முறையான அனுமதி இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே சிறையில் அடைப்பதற்கு உத்தரவிடக் கூடாது என்று தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த வழக்கிற்கு காரணம் ஆகும். பி.டி.அரசகுமார் பணம் வசூலித்து தனது பெயரில் சொத்து வாங்கி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி கல்வித்துறை கோப்புகளில் அமைச்சர் மட்டுமே கையெழுத்து இடுவதில்லை. அரசுத்துறை அலுவலர்களும் கையெழுத்திட வேண்டும். கடந்த 1½ மாதங்களாக விசாரணைக்கு அன்பில் மகேஷ் முழு ஒத்துழைப்பு அளித்து இருப்பதாகவும் கோர்ட்டில் வாதிடப்பட்டது. அன்பில் மகேஷ் கைது தொடர்பாக குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், சிறையில் அடைக்கப்படாமல் நிராகரிப்பதற்கு இது ஒன்றே போதுமான காரணமாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இப்படி இருதரப்பும் காரசாரமாக மாறி மாறி வாதிட்ட நிலையில் இரவு 12 மணியளவில் விவாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்தே அன்பில் மகேசை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேசிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை அது தொடர்பான மனுவை போலீசார் தாக்கல் செய் வார்கள். 2 அல்லது 3 நாட்கள் வரையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் இந்த மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்த பிறகு கோர்ட் அதன் மீது முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்கும். அதன் பிறகே அன்பில் மகேசுக்கு எத்தனை நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது தெரிய வரும்.

இதனிடையே, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின் போது வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்