நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போன் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இதற்காக அனைத்து வகையான ரெயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பயண நேரத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட ஒரு ரெயிலில் பயணி ஒருவர் பவர்பேங்கை (சார்ஜ் பேட்டரி) சார்ஜிங் பாயிண்ட்டில் பொருத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தபோது வெடித்து புகை கிளம்பியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதனைத்தொடர்ந்து. ரெயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
அதில், ரெயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தும் நிலவுவதால், இந்த உத்தரவை ரெயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.