சிறப்புச் செய்தி

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்- அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் மக்கள் பீதி

1 hour ago 8 பார்வைகள்
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்- அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் மக்கள் பீதி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதியினர்.

இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மாயமானாள். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். மேலும் 10 தனிப்படைகள் அமைத்தும் தேடும் பணி நடந்தது. ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, வேல்முருகன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர்.

ஆலம்பூண்டியில் உள்ள பள்ளியில் தற்காலிக விசாரணை மையம் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 6 நாட்களாக சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து 6 மணி நேரமாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் 2-ம் கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, வேல்முருகன் தலைமையிலான போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று, அங்கு மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேட்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

இந்நிலையில் மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வயல் வெளியில் தனியாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் மூதாட்டி மட்டும் உள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியின் வீட்டின் கதவு இருமுறை பலமாக தட்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூதாட்டி அச்சம் அடைந்தார். இன்று காலை அவர் தனது வீட்டின் கதவு தட்டப்பட்டது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்