புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், அவர்களுக்குத் தேவையான அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் உடனடி நிதியுதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புயல் சேதங்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மின்கட்டமைப்பை சீரமைக்க ஆந்திராவைச் சேர்ந்த 2,000 ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், தெலுங்கானாவில் இருந்து 1,000 ஊழியர்கள் ஆந்திரா விரைந்துள்ளனர். தேவைப்பட்டால் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் உதவியும் நாடப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
புயலால் சேதமடைந்த ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் ரூ.1,500 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் சேதங்களை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக மத்திய குழு இன்று ஆந்திரா வருகை தருகிறது.
இக்குழுவினர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்திய பின் சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு மாநிலத்திற்கான கூடுதல் நிதியுதவியை வழங்கும் என சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.