வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டபோது, பல்வேறு குளறுபாடு ஏற்பட்டதால், லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதான கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் SIR போது குளறுபடி ஏற்பட்டதாக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற SIR பணியின்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயரை நீக்க மொத்தமாக படிவம் 7 சமர்ப்பிக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. தனுஜ் புனியா மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைகேடுகள் குறித்த விவரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரிடம் ஒரு குறிப்பின் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதை பெற்றவுடன், இந்தியத் தேர்தல் ஆணையம் அந்த உண்மைகளை ஆய்வு செய்து, தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் மீதான இணக்க அறிக்கையை (compliance report) தாக்கல் செய்ய வேண்டும்" என்றனர்.
விசாரணையின்போது வழக்கு தொடர்ந்தவர்கள் ஒருவர் சார்பில் ஆஜரான வக்கீல் "படிவம் 7 விவகாரம் உத்தர பிரதேசத்துடன் தொடரபுடையது. வாக்குகளை நீக்க மொத்தமாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது" என்றார்.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ். நாயுடு "படிவம் 7 மொத்தமாக சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அவைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நாங்கள் இதை கண்டுபிடித்தோம். எங்கள் அதிகாரிகள் அவற்றைச் சரிபார்த்து, மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர். அவை பொய்யானவை. அவற்றை நாங்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "ஒரு தொகுதியில் ஒரு சமுதாயத்தில் உள்ள நபர்களை குறிவைத்து 32 விண்ணப்பங்கள் மொத்தமாக சமர்ப்பிக்கப்பட்டன" என்றார்.
இந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.