தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், 5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டு டைமை செய்தமைக்கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும், திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழ் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கு வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்.
மேலும், நவம்பர் 1-ம் நாள் மாலை தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும்.
தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.