சிறப்புச் செய்தி

275 படிக்கட்டுகளிலும் வெவ்வேறு யோகாசனங்கள் செய்து மாணவர்கள் அசத்தல்

3 hours ago 11 பார்வைகள்
275 படிக்கட்டுகளிலும் வெவ்வேறு யோகாசனங்கள் செய்து மாணவர்கள் அசத்தல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பிரசித்தி பெற்ற ஐவர் மலை உள்ளது. இந்த மலையின் சிறப்பு என்னவெனில் கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் காணப்படும். மலையின் உச்சியில் சிவன், முருகன், நந்திகேஸ்வரர், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. 9ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான இந்த கோவில் சமணர் படுகைகளை கொண்டதாகும். இயற்கை நீரூற்று, பாறைச் சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் காணப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள், திரவுபதி ஆகியோர் இங்கு தங்கியிருந்ததால் ஐவர் மலை என அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு செல்ல 275 படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகளில் பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்களான நகுலன் (வயது 13), மேகவர்ணிகா (13), ரெணுஷ்கா (13) ஆகிய 3 பேரும் வித்தியாசமான முறையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக பழனி அருகே உள்ள ஐவர் மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை உள்ள 275 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படியாக யோகாசனம் செய்தபடி ஏறினர்.

சூரிய நமஸ்காரம், கோணாசனம், அர்த்த கோணாசனம், தடாசனம், பத்மாசனம், வீராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை ஒவ்வொரு படிக்கட்டிலும் செய்து அசத்தினர். மாணவர்களின் இந்தச் சாதனை முயற்சியை குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்தது.

நாங்கள் 3 பேரும் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். சிறு வயது முதலே யோகாசனம் வகுப்பிற்கு ஒன்றாக சென்று வருவோம். இதில் ஏதேனும் ஒரு சாதனை படைக்க வேண்டும் என விரும்பினோம். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். யோகாசனத்தின் பெருமையை உணர்ந்து சிறு வயதிலிருந்தே இதனை கற்று உடல் வலிமையை உறுதியாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டோம்.

275 படிக்கட்டுகளிலும் வெவ்வேறு ஆசனங்களை செய்து காட்டியதை உலக சாதனையாக அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்