காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினந்தோறும் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
மேலும் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் 3 ஷிப்டுகளாக 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் தலைமை செவிலியர் ஒருவர் இந்த மாதம் பணிநிறைவு பெற உள்ளார். இதையடுத்து அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது சீருடையில் பணி நேரத்தில் இருந்த நர்சுகள் 10-க்கும் மேற்பட்டோர் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.
அவர்கள் அங்கு ஒலித்த சினிமா பாடல்களுக்குக் குத்தாட்டம் போட்டனர். செவிலியர்களின் இந்த குத்தாட்டம் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இது கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
நர்சுகள் பணி நேரத்தில் குத்தாட்டம் போட்ட விவகாரத்தில் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.