சிறப்புச் செய்தி

முரசு புயல் தீவிர புயலாக வலுவடைந்தது - வானிலை ஆய்வு மையம்

6 hours ago 18 பார்வைகள்
முரசு புயல் தீவிர புயலாக வலுவடைந்தது - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வங்கக்கடலில் 2-வது புயல் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து நேற்று புயலாகவும் உருவானது.

இந்த புயலுக்கு 'முரசு' என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை இந்தியா தான் பரிந்துரைத்து இருந்தது. இந்த புயல், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் மாறுகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று நள்ளிரவோ, நாளை அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் முரசு புயல் தீவிர புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தீவிர புயலாக வலுவடைந்த முரசு புயல் சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. முரசு புயல் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்கிறது.

நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 210 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் காவலிக்கு கிழக்கு-தென்கிழக்கே 220 கி.மீ., ஓங்கோலுக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

முரசு புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

முரசு புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் ஆந்திராவின் ஓங்கோல் அருகே, நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே முரசு புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்