கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா, ராணுவத்தில் இணைக்க பல்வேறு வகையான ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் டைப்-2 கொத்து குண்டை வட கொரியா சோதித்துள்ளது.
போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு திறனை மதிப்பிடும் நோக்கில் கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சோதனையை ராணுவ ஜெனரல் கிம் ஜாங் சிக் மேற்பார்வையிட்டார்.
கொத்து குண்டுகள் பொதுவாக பத்து முதல் நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளாக பிரிந்து ஒரு பரந்த பகுதியில் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும்.
ஒரு ஸ்டாண்டர்ட் டைப்-2 கொத்துப் போர்க்குண்டானது, அதன் அதிகபட்ச அடர்த்தியில், 12 முதல் 13 ஹெக்டேர், அதாவது சுமார் 30 முதல் 32 ஏக்கர் பரப்பளவை அழிக்க முடியும் என்று வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.
தாக்குதல் டிரோன்கள், டார்பிடோ அமைப்பு மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வட கொரியா சமீபத்தில் சோதித்ததை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கொத்துக் குண்டு பொருத்தப்பட்ட ஹ்வாசோங் 11 பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா சோதித்தது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்த சோதனையை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார்.