சிறப்புச் செய்தி

3 விக்கெட் காலி.. பஞ்சாப் தேர்தலில் பாஜக கேம்? - ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா

3 hours ago 21 பார்வைகள்
3 விக்கெட் காலி.. பஞ்சாப் தேர்தலில் பாஜக கேம்? - ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா

2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று முன் தினம் வெளியிட்டது.

இதையடுத்து சனௌர் தொகுதியின் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சமனா தொகுதியின் எம்எல்ஏ சேதன் சிங் ஜௌரமஜ்ரா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருவரது பெயரும் இடம்பெறவில்லை. மேலும், இவர்களது தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்ததால், தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட அமிர்தசரஸ் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான குன்வர் விஜய் பிரதாப் சிங்கும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமாவை சபாநாயகர் குல்தார் சிங் சந்தவானுக்கு அவர் அனுப்பினார்.

"நான் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்" என தன் முகநூலில் பதிவிட்டதோடு, தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேதன் சிங் ஜௌரமஜ்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்த நிலையில் பிரதாப் சிங் ராஜினாமா ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

மூவரும் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைத்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்