கன்னியாகுமரி: கடல் அலையில் சிக்கி மாணவி பலி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் கொடுப்பாட்டுவிளை பகுதியை சேர்ந்த முருகன் மகள் சுருதி (வயது 14). பள்ளி மாணவியான இவர் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் முருகன் தனது மகள் சுருதி, மற்றொரு மகள் மற்றும் உறவினர் சுஜின் லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவர்களது குழந்தைகள் சுஜித்(12), கெபிராடானியா(6) ஆகியோருடன் குறும்பனை பாரிக்கல் கடற்கரைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார்.

அங்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடல் அலையில் கால்களை நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு எழுந்த ராட்சத அலை, சிறுமி சுருதி மற்றும் சுஜித் ஆகிய 2 பேரையும் வாரி சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. இவர்களில் சிறுவனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீச்சலடித்து வெளியே வந்துவிட்டான். ஆனால் சிறுதி சுருதி கடல் அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடலுக்குள் படகில் சென்று மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மாணவியை தேடும் பணி 3வது நாளாக மேற்கொள்ளப்பட்டது.

அப்போது குறும்பனை கடற்கரையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்மிடாலம் பகுதியில் கடலில் மாணவி சுருதி பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டு படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel