தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்: ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அக். 2-ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் விஜய் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலமைச்சர் விஜய் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அக்டோபர் 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். “வெற்றிப் பயணம்” திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 சதவீதம்), மொத்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகளில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 312 நடைகள் (85 சதவீதம்) இயக்கப்படும்.

நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள். மேலும், “வெற்றிப் பயணம்” பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான இணைப்புப் பணி நிறைவடைந்துள்ளது. சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் வருகிற 25-ந்தேதிக்குள்ளும், சோதனை ஓட்டம் 27-ந்தேதி அன்றும் மேற்கொள்ளப்படும்.

“வெற்றிப் பயணம்” திட்டத்தினை முதலமைச்சர் விஜய் அக்டோபர் 2-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.

கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சென்னை உள்பட கடலோர மாவட்ட மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்கள்.

இதில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சுகாதாரத்துறை, மின் துறை, போக்குவரத்து துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது . பேரிடர் காலத்தில் மீட்பு உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள், மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், ஆகாய தாமரை செடி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துதல், சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்கோபுரங்களை உடனடியாக சீரமைத்தல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்து முதலமைச்சர் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel