சிறப்புச் செய்தி

தந்தையின் கடைசி போட்டோவை தவறவிட்ட இந்திய பெண் - பத்திரமாக மீட்டுத் தந்த டாக்ஸி டிரைவர்!

7 hours ago 11 பார்வைகள்
தந்தையின் கடைசி போட்டோவை தவறவிட்ட இந்திய பெண் - பத்திரமாக மீட்டுத் தந்த டாக்ஸி டிரைவர்!

துபாயில் வசித்து வரும் வர்திகா சர்மா என்ற இந்தியப் பெண், சமீபத்தில் 'கரீம்' நிறுவன டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தனது பணப்பையை காரிலேயே தவறவிட்டுள்ளார்.

அந்தப் பையில் பணம், வங்கி அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றுடன், கடந்த டிசம்பர் மாதம் காலமான அவரது தந்தையின் கடைசி பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் இருந்துள்ளது.

பணம் மற்றும் அட்டைகளை விட, தன் தந்தையின் அந்த ஒரு புகைப்படம் தனக்கு விலைமதிப்பற்றது என்றும், அதனைத் தொலைத்துவிட்டு மிகுந்த கவலையில் இருந்ததாகவும் வர்திகா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டாக்ஸி ஓட்டுநர் அந்தப் பையைக் கண்டுபிடித்துப் பத்திரமாக வைத்துள்ளதாக 'கரீம் கேர்' வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து வர்திகாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வர்திகாவிடம் அவரது பணப்பை ஒப்படைக்கப்பட்டது. அதில் இருந்த பணம், கார்டுகள் மற்றும் அவரது தந்தையின் புகைப்படம் என அனைத்தும் அப்படியே பத்திரமாக இருந்துள்ளன.

இதனால் நிம்மதியடைந்த வர்திகா, ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு அன்பளிப்புத் தொகை வழங்க முற்பட்டுள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் பணத்தை வாங்க மறுத்து, தனது கடமையை மட்டுமே செய்ததாகக் கூறி நெகிழ வைத்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வர்திகா தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "துபாயின் நேர்மை மற்றும் மனிதாபிமானம் பற்றி நாம் பல கதைகளைக் கேட்டிருக்கிறோம்.

ஆனால் இன்று அதை நான் நேரில் அனுபவித்தேன். மனிதர்கள் மீதான நம்பிக்கையை இந்த நகரம் மீண்டும் மீட்டெடுத்துள்ளது" என்று பதிவிட்டு, டாக்ஸி ஓட்டுநருக்கும் கரீம் நிறுவனத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்