மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு, 64 நாட்கள் கடந்துவிட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்னும் முறைப்படி ஒத்திவைக்கப்படவில்லை. இத்தகைய சூழல் முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை.
தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்பாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நான் முதன்முதலில் ஏப்ரல் 11-ம் தேதியே உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்ததை நினைவுகூர வேண்டுகிறேன்.
ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதன் பிறகு, ஏப்ரல் 14-ம் தேதி இரவு வேளையில் அந்த மசோதாக்களை பொதுவெளியில் வெளியிட்டீர்கள். மேலும், ஏப்ரல் 16-ஆம் தேதி ஒரு சிறப்பு அமர்வை கூட்டினீர்கள். தொகுதி மறுவரையறை குறித்த அந்த அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில், தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாமல் தோல்வியடைந்தது.
அதன்பிறகு, 2026-ம் ஆண்டு ஜூலை 16 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உங்களுக்கு கடிதம் எழுதினேன். இப்போது நான்காவது முறையாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பாக, உங்கள் புதிய முன்மொழிவுகள் குறித்து விரிவாக விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களுக்குள்ளும், பிற பங்குதாரர்களுடனும் இது குறித்து ஆலோசிப்பதற்கு போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
முன்னதாக நீங்கள் மேற்கொண்ட முயற்சியைப் போல, தொலைநோக்கு பாதிப்புகளை கொண்ட ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் எவ்வித ஆலோசனையுமின்றி வலுக்கட்டாயமாக நிறைவேற்ற மீண்டும் முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்த முயற்சி ஏற்கனவே தகுந்த தோல்வியைச் சந்தித்தது என்பதை நினைவில் கொள்க.
இவ்வாறு கார்கே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.