சிறப்புச் செய்தி

குற்றவாளிக்கு துணைபோன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.பி. இன்பதுரை வலியுறுத்தல்!

38 minutes ago 10 பார்வைகள்
குற்றவாளிக்கு துணைபோன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.பி. இன்பதுரை வலியுறுத்தல்!

கடந்த சில வாரங்களாகவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், இந்த விவகாரத்தில் முறையான புகார் இல்லை எனக்கூறி அரசும், காவல்துறையும் கள்ள மவுனம் காத்து வந்தது. தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியும், டிஜிபி இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியவாறு தெரியவில்லை.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கில், நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில், “மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, நேற்று மாலையே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல், பாலியல் சாயலுடைய கருத்து தெரிவித்தல், பாலியல் வற்புறுத்தல், பெண்ணை பின் தொடர்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக வழக்கறிஞர் எம்.பி. இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனக்கூறிய அமைச்சர்கள்மீது (ராஜ்மோகன், நிர்மல்குமார், அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த்) நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் குற்றவாளிக்கு துணைப் போயுள்ளனர். உடனடியாக அருள் விக்னேஷை கைது செய்யவேண்டும்.

அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை அரசியலுக்காக அதிமுக பேசவில்லை. இங்கு மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பில்லை. இவ்வளவு நாட்கள் வழக்குப்பதியாமல் இருப்பதற்கு துணைபோன அதிகாரிகள் யார்? இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்பது தெரியவர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்