சிறப்புச் செய்தி

பிச்சைப் பாத்திரத்துடன் வர வேண்டாம்... : ராகுல் காந்தியை குறிப்பிட்ட பாஜக தலைவர் ராம் மாதவ்

10 hours ago 18 பார்வைகள்
பிச்சைப் பாத்திரத்துடன் வர வேண்டாம்... : ராகுல் காந்தியை குறிப்பிட்ட பாஜக தலைவர் ராம் மாதவ்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை மசோதாவை மறுபரீசிலனை செய்யுமாறு ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றதாகவும் ராகுல் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பை பாதுக்காக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் எனவும் ராகுல் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தேசிய பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ராம் மாதவ், பிச்சைப்பாத்திரத்துடன் சென்னைக்கு வர வேண்டாம் என ராகுல் காந்தியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராம் மாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்.

ஆனால், கட்டபொம்மனுக்கு பின்னால் குத்துவதற்காக ஆங்கிலேயர்களுடன் சதி செய்தவர் தான் எட்டப்பன். கடந்த காலத்தில் ராகுல் காந்தி, திமுகவை ஆணவத்துடன் எட்டப்பன் என்று அழைத்தார்.

இப்போது, திமுகவுக்கு பின்னால் குத்தியதற்காக ராகுலை எட்டப்பன் என்று குறிப்பிட்டு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் சகோதரர் ராகுல் காந்தி, இனிமேல் பிச்சைப் பாத்திரத்துடன் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் ஸ்டாலின் பணிவுடன் கூறியுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்