அமெரிக்காவில் கடந்த நவம்பர் 14 அன்று, மினியாபோலிஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 25 வயது இளைஞர் சமித் அபூர்வா படேல், 51 வயதான சோமாலிய ஊபர் ஓட்டுநர் முகமது யூசுப் உடைய காரில் ஏறியுள்ளார்.
திடீரென முகமது மீது தாக்குதல் நடத்திய சமித் அபூர்வா படேல் அவரை சீட் பெல்ட்டால் கழுத்தை நெரித்து, பின்னர் அவரது காரையே அவர் மீது ஏற்றி, அதன்பின் ஒரு பள்ளத்தில் அவரை வீசியெறிந்துள்ளார்.
கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட முகமது சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி முகமது யூசுப், நேற்று காலை ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்தில் உயிரிழந்ததார்.
சம்பவம் நடந்தபோது யூசுப், தனது சகோதரருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
பயணி, 'முகமது' என்ற பெயர் தனக்குப் பிடிக்கவில்லை என்று யூசுப்பிடம் கூறியதைக் கேட்டதாக யூசுப்பின் சகோதரர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். மேலும், யூசுப் அலறியதையும் அவர் கேட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சமித் அபூர்வா படேல் மீது, இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்னதாக கொலை முயற்சி மற்றும் கார் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அந்தக் குற்றச்சாட்டுகள், திட்டமிட்ட கொலை எனத் தரம் உயர்த்தப்படும் என்று ஹென்னெபின் மாவட்ட வழக்கறிஞர் மேரி மோரியார்டி கூறினார்.
யூசுப் மீதான தாக்குதல் சோமாலிய சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சோமாலிய மக்கள் தொகை மினசோட்டாவில்தான் உள்ளது.
அவர்களில் பலர் மினியாபோலிஸ்-செயின்ட் பால் பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அமெரிக்கக் குடிமக்களே.