சிறப்புச் செய்தி

மிட்செல் மார்ஷ் அதிரடி சதம் வீண்: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

6 hours ago 18 பார்வைகள்
மிட்செல் மார்ஷ் அதிரடி சதம் வீண்: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இங்கிலாந்து 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் 4-வது போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. முதல் நான்கு வீரர்கள் பில் சால்ட் (7), டொனால்டு (7), ஹாரி ப்ரூக் (9), டாம் பான்டன் (3) ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 50 ரன்களும், ஜேம்ஸ் கோல்ஸ் 33 ரன்களும், டாசன் 23 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு பக்கம் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் மெக்கர்க் (0), சாம் ஹார்பர் (18), நிகில் சவுத்ரி (12), டிம் டேவிட் (12), லச்லான் ஷா (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலியா அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. மிட்செல் மார்ஷ் சதம் விளாசி களத்தில் இருந்தார்.

19-வது ஓவரை ஓவர்டன் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மார்ஷ், 5-வது பநதை பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கினார்.

இதனால் இந்த ஓவரில் ஆஸ்திரேலியா 18 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது பந்தில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் தலா 9 பவுண்டரி, சிக்சர்களுடன் 119 ரன்கள் விளாசினார்.

கடைசி 2 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்திலும் ஆஸ்திரேலியா விக்கெட்டை இழந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க ஆஸதிரேலியாவால் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள்தான் அடிக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-1 எனக்கைப்பற்றியது. 5-வது மற்றும் கடைசி போட்டி டிசம்பர் 2-ந்தேதி நடக்கிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்