INDIAN 7

Tamil News & polling

இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி

22 ஜூலை 2024 01:47 AM | views : 896
Nature

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார்.

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதே போல ஃபைனலில் 34/3 என தடுமாறிய போது களமிறங்கிய அவர் அதிரடியாக 47 ரன்கள் குவித்து இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினார். இந்நிலையில் இந்திய அணியில் தமக்கு பேட்டிங்கில் நிலையான இடம் கொடுக்கப்படவில்லை என அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.


மாறாக போட்டி எப்படி செல்கிறதோ அதற்கு தகுந்தார் போல் களமிறங்கும் கடினமான வேலை தமக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அப்படி எந்த இடத்தில் விளையாடுவோம் என்பது தெரியாததால் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அணியில் தங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தை விரும்புவார்கள்”

“ஏனெனில் எந்த இடம் என்று தெரியும் போது அதற்காக திட்டமிடுவது சற்று எளிதாகிறது. ஆனால் எனக்கு மிதப்பவரை போன்ற வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நம்மை நம்புகிறார்கள் என்ற உணர்வையும் கொடுக்கிறது. அதனாலேயே அவர்கள் என்னை கடினமான சூழ்நிலைகளில் அனுப்புகிறார்கள். நானும் அதை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன்”

“குறிப்பாக அணி உயர்ந்து நிற்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அவர்கள் என்னை விரும்புகின்றனர். அப்படியானால் என்னிடம் அவர்கள் ஏதோ ஒன்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதே அர்த்தம். அப்படி அணி நிர்வாகமே நம்பிக்கை வைத்து முக்கியமான சூழ்நிலையில் களமிறக்கும் போது நீங்களும் தாமாக உங்கள் மீது நம்பிக்கை வைக்கத் துவங்குவீர்கள்”


“அணி நிர்வாகம் விரும்பும் சூழ்நிலையில் நீங்கள் ஓரிரு போட்டிகளில் அசத்தி விட்டால் அது உங்களுடைய தன்னம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும். இந்திய அணி மட்டுமின்றி டெல்லி அணியிலும் அது போன்ற வேலையை செய்யுமாறு என்னிடம் சொல்வார்கள். அதன் காரணமாக குறிப்பிட்ட பேட்டிங் இடத்தைப் பற்றி கவலைப்படாமல் எந்த இடத்திலும் விளையாடும் தன்னம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும். அதனால் நான் நீண்ட காலத்தை பார்க்காமல் நிகழ்காலத்தில் இருந்து விளையாட முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்