INDIAN 7

Tamil News & polling

டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த இலங்கை... மோசமான உலக சாதனை!

31 ஜூலை 2024 08:47 AM | views : 760
Nature

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. ஆனால் அந்தத் தொடரின் 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா 3 – 0 என்ற கணக்கில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்து கோப்பையை வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்தது.

பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வாஷிங்டன் சுந்தர் 25, ரியான் பராக் 26, கில் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.

மோசமான சாதனை:
அதிகபட்சமாக குசால் பெரேரா 46, குசால் மெண்டிஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார், ரிங்கு சிங், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் இலங்கையை ஆல் அவுட் செய்தார்.

அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். முன்னதாக அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே 34/5 என தடுமாறியதால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் போராடிய இந்தியா 137 ரன்கள் அடித்து கடைசியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது.

இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பின்பும் சூப்பர் ஓவரில் இந்தியா வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. அதாவது 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தும் கடைசியில் இந்தியா சூப்பர் ஓவரில் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே வென்ற இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.


மறுபுறம் முதலிரண்டு போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் சொதப்பிய இலங்கை கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு தாரை வார்த்தது என்றே சொல்லலாம். இதையும் சேர்த்து இலங்கை இதுவரை 105* தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை இலங்கை படைத்துள்ளது. இதற்கு முன் வங்கதேசம் 104 தோல்விகள் சந்தித்ததே முந்தைய சாதனையாகும்.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்