INDIAN 7

Tamil News & polling

தங்கை ஷர்மிளாவுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு - தீர்ப்பாயத்தில் அடுத்த மாதம் விசாரணை

24 அக்டோபர் 2024 01:58 AM | views : 844
Nature

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.

அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம்வரை, ஆந்திர மாநில முதல்-மந்திரியாக இருந்தார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.

ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற தனிக்கட்சி நடத்தி வந்தார். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.

அந்த கட்சியின் ஆந்திர மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கடப்பா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது தங்கை ஷர்மிளாவுக்கு எதிராக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் ஐதராபாத் கிளையில் ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது சில சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகளின் முடிவை பொறுத்து, சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் எனக்கும், என் மனைவி பாரதிக்கும் சொந்தமான பங்குகளை பிற்காலத்தில் தான் செட்டில்மெண்ட் மூலம் என் தங்கை ஷர்மிளா பெயருக்கு மாற்றுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி ஷர்மிளாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

இது, முற்றிலும் பாசம் மற்றும் அன்பின் காரணமாக செய்து கொள்ளப்பட்டது.

பின்னர், மாறிவிட்ட சூழ்நிலை காரணமாக, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவதாக ஷர்மிளாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.

ஆனால், எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக சரஸ்வதி பவர் நிறுவனத்தில் எனக்கும், என் மனைவிக்கும் சொந்தமான பங்குகள் ஷர்மிளாவின் பெயருக்கு வாரிய தீர்மானம் மூலம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளன. அதுபோல், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான கிளாசிக் ரியால்டி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளும் எங்கள் தாயார் விஜயம்மா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஷர்மிளா சிறிது கூட நன்றி இல்லாமலும், தன் சகோதரர் நலனில் அக்கறை இல்லாமலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

மேலும், அரசியல்ரீதியாக எனக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், உண்மையற்ற, பொய்யான அறிக்கைகளை பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள், சகோதர-சகோதரிக்கு இடையிலான உறவை சீர்குலைத்து விட்டன. ஒரு அண்ணன், தனது தங்கை மீது வைத்திருந்த பாசம் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்து விட்டது.

எங்களுக்கிடையே இனிமேல் பாசம் எதுவும் இல்லை. எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறியபடி, ஷர்மிளா பெயருக்கு பங்குகளை மாற்ற நான் விரும்பவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு, அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்