INDIAN 7

Tamil News & polling

கார்த்தியின் வா வாத்தியார் - திரை விமர்சனம் : எப்படி இருக்கிறது?

14 ஜனவரி 2026 12:12 PM | views : 59
Nature

1987-ல் நடக்கும் இந்த கதையில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், அவரது மறைவால் அதிர்ந்து போகிறார். அப்போது அவருக்கு பேரன் பிறக்கிறான். இதனால் தனது பேரன்தான் அடுத்த எம்.ஜி.ஆர். என்று எண்ணி, அவரை எம்.ஜி.ஆரின் குணநலன்களுடன் வளர்க்கிறார்.

முதலில் எம்.ஜி.ஆர். மாதிரி நேர்மையாக வளரும் கார்த்தி, காலப்போக்கில் நம்பியாரை ரோல்மாடலாக கொண்டு திசைமாறுகிறார். லஞ்சம் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாறிபோகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்கள் மூலம் 'மஞ்சள் முகம்' என்ற பெயரில் அரசின் போலி முகத்திரையை கிழித்து வரும் சில இளைஞர்களை 'என்கவுண்ட்டர்' செய்ய காவல்துறை திட்டமிடுகிறது. இதற்கு கார்த்தியும் துணைபோகிறார்.

கார்த்தியின் உண்மையான முகம் தெரியவர ராஜ்கிரண் கவலையில் இறந்துபோகிறார். அப்போது யாருமே எதிர்பாராத சில ஆச்சரியங்கள் அரங்கேறுகிறது. இதனால் கார்த்தியின் வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் அரங்கேறுகிறது? என்பதே மீதி கதை.

கலகலப்பான வேடத்தில் புகுந்து விளையாடும் கார்த்தி, எம்.ஜி.ஆராக மாறி அக்கிரமக்காரர்களை துவைத்து எடுப்பதில் 'ஸ்கோர்' செய்துள்ளார். அதிலும் சண்டையில் கூட பெண்களை அடிக்கமாட்டேன் என்று காட்டும் செய்கை ரசிப்பு. இன்னும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தால் நம்பியாரின் ஆன்மாவே பாராட்டியிருக்கும்.

அழகு பதுமையான கீர்த்தி ஷெட்டியை இவ்வளவு அளவாகத்தான் பயன்படுத்த வேண்டுமா? அவ்வப்போது தொடையழகை மட்டும் காட்டி செல்கிறார். ராஜ்கிரண், சத்யராஜ், நிழல்கள் ரவியின் அனுபவ நடிப்பு கைகொடுத்துள்ளது. ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், கருணாகரன், ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், பி.எல்.தேனப்பன், வித்யா உள்ளிட்டோரின் மிகையில்லா நடிப்பும் சிறப்பு.

ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவில் காட்சிகள் 'கலர்புல்'. சந்தோஷ் நாராயணனின் இசை 'பவர்புல்'. எம்.ஜி.ஆரின் பாடல்களை தான் 'ரீமிக்ஸ்' செய்துள்ளார்கள் என்பதால் 'பெரியவர்' சிக்கல் இல்லை.

காட்சிகளில் சுவாரசியம் குறைவு என்றாலும் போர் அடிக்கவில்லை. ஆனால் முதல் பாதியில் இருந்த பரபரப்பு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் 'மிஸ்ஸிங்'. 'வாத்தியார்' படத்துக்கு 'லாஜிக்' தேவையில்லை, 'மேஜிக்' நிறைய இருக்க வேண்டுமல்லவா? யூகிக்க முடிந்த காட்சிகளும் படத்துக்கு சற்று பின்னடைவை தருகிறது.

தனக்கே உரிய டார்க் காமெடி தளத்தில், எம்.ஜி.ஆர். என்ற பேராயுதத்தை பயன்படுத்தி, புதுமையான காட்சிகளில் பொங்கல் படைத்துள்ளார், இயக்குனர் நலன் குமாரசாமி. எம்.ஜி.ஆர். தோன்றும் இடங்களும், அவரது வசீகர குரலும் சிலிர்ப்பு.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்