INDIAN 7

Tamil News & polling

ஆசிரியர்கள் கவனக்குறைவால் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

15 பிப்ரவரி 2023 01:59 PM | views : 707
Nature

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள் ஆற்றில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இறந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு குவிந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இவ்விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்தவர்கள் 7 ஆம் வகுப்பு மாணவி ஷோபியா, 8 ஆம் வகுப்பு மாணவி தமிழரசி, ஆறாம் வகுப்பு மாணவிகள் லாவன்யா, இனியா ஆகிய நான்கு மாணவிகள். இவர்கள் உட்பட 13 மாணவிகளை நேற்று மதியம் 3 மணிக்கு அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இப்ராஹிம் மற்றும் ஆசிரியர் திலகவதி ஆகியோர், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

நேற்று இரவு அந்த கல்லூரி வளாகத்தில் தங்கிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், இன்று அருகே உள்ள கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றின் அணைக்கட்டு பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஒரு மாணவி தண்ணீரில் இறங்கிய போது எதிர்பாராவிதமாக அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதைப்பார்த்த சக மாணவிகள் மூன்று பேர், அந்த மாணவியை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் 7 ஆம் வகுப்பு மாணவி ஷோபியா, 8 ஆம் வகுப்பு மாணவி தமிழரசி, ஆறாம் வகுப்பு மாணவிகள் லாவன்யா, இனியா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் ஆத்திரத்தில் பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறி அழுதக் காட்சி காண்போரை கலங்கச் செய்தது. இதில் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்ற விவரம் குறித்து பள்ளியில் இருந்த பிற ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களோடு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அங்கு இலுப்பூர் டிஎஸ்பி காயத்திரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொட்டியத்தில் உள்ள கல்லூரிக்கு மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துச் சென்ற ஆசிரியர்கள், ஏன் கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால்தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மற்றொரு பக்கம், இறந்த மாணவிகளின் உடல்களை வாங்க பெற்றோரும் உறவினரும் மறுத்துவருகின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்