Tamil News & polling
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-"சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கையை பத்தாண்டுகள் கிடப்பிலும், அதற்கு முந்தைய காகா கலேல்கர் ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியிலும் போட்டு வைத்திருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த இந்த ராமதாசால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வலிமையாக இருக்கும்போது, சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் சமூகநீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்த கவலை கிஞ்சிற்றும் தேவையில்லை.தமிழ்நாட்டில் தி.மு.க. 6 முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுதான் ஆட்சி அமைத்திருக்கிறது. அப்போதெல்லாம் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவாதம் அளித்ததா? 5 முறை தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது. அந்த 5 முறையும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் தொடர்பாக காங்கிரசிடமிருந்தும், பாரதிய ஜனதாவிடமிருந்தும் உத்தரவாதம் பெற்றதா? என எனக்குத் தெரியவில்லை.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்போது மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வி.பி.சிங் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலையில், அதை உயர்கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் சேர்க்க பா.ம.க. வலியுறுத்தியது. பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் அந்தக் கோரிக்கையை பொதுச் செயல்திட்டத்தில் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டது.
2004-ம் ஆண்டுக்கு முந்தைய சமூக நீதி வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இடமும் கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தனி ஆணையம் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. அதைக் கண்டித்து அண்ணல் அம்பேத்கர் பதவி விலகிய பிறகு தான் காகா கலேல்கர் தலைமையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையத்தை நேரு அரசு அமைத்தது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தாமல் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தவர் தான் அன்றைய பிரதமர் நேரு.
அதன்பின் 1979-ம் ஆண்டு ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் அதன் அறிக்கையை தாக்கல் செய்த போதிலும், அதை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு ராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மண்டல் ஆணையத்தின் அறிக்கையை 'புழுக்கள் நிறைந்த குடுவை' என்று கூறி அதைத் தொடக்கூட மறுத்தார்.
இவை அனைத்தும் பதியப்பட்ட வரலாறு ஆகும்.சமூகநீதிக்கு எதிராக இத்தகைய பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியால் முடிந்தது என்றால், அதற்கு காரணம் சமூகநீதிக் கொள்கையில் பா.ம.க.வுக்கு இருந்த உறுதிப்பாடும், நாடாளுமன்றத்தில் பா.மக.வுக்கு இருந்த வலிமையும்தான். கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிகின்றன. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை குறித்த தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதல்-அமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் ஒரு துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.
ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்."இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress