INDIAN 7

Tamil News & polling

டி20 உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி 2 உலக சாதனை!

09 ஜூன் 2024 11:42 PM | views : 808
Nature

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அற்புதமான வெற்றி பெற்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாகிஸ்தான் வெல்லும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.



இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். ஆனால் அதைத்தொடர்ந்து 119 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பம் முதலே சரியான லைன், லென்த்தை பிடித்து வீசிய இந்திய பவுலர்கள் அதிரடியாக விளையாட விடாமல் மடக்கி பிடித்தனர்.



அதனால் 20 ஓவரில் முடிந்தளவுக்கு போராடியும் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் இந்தியா ஆல் அவுட்டான போது பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு 92% வாய்ப்புகள் உள்ளதாக கணினியின் கணிப்பு கூறியது.



மறுபுறம் இந்தியாவுக்கு வெறும் 8% மட்டுமே வாய்ப்பு இருந்ததால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனாலும் மனம் தளராத இந்திய அணியினர் பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சை கச்சிதமாக பயன்படுத்தி 92% அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கி கணினியின் கணிப்புகளை பொய்யாக்கி வரலாற்றின் மகத்தான வெற்றியை பெற்றனர். அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது.

அதை விட இப்போட்டியில் 120 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியா டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்த இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற இலங்கையின் உலக சாதனையை சமன் செய்தது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டோகிராம் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணியும் 120 ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை படைத்திருந்தது.



அது போக இதையும் சேர்த்து டி20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7வது வெற்றியை பதிவு செய்தது. அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (7) பதிவு செய்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இலங்கையும் தலா 6 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனையாகும்.


Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்