வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: 2 பேருக்கு சிறை தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சர்னித் (வயது 30). இவருடைய வீட்டில் கடந்த 21.10.2019 அன்று நள்ளிரவில் 2 பேர் புகுந்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி சர்னித்தின் தாயார் வசந்தி அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்தனர். அதை தடுக்க முயன்ற சர்னித்தை தாக்கிவிட்டு 2 பேரும் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கண்ணார்பட்டியை சேர்ந்த சண்முகம் (45), தேனி மாவட்டம் பெரியகுளம் செம்மண்குழி பகுதியை சேர்ந்த செல்லமுத்து (32) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.
சிறை தண்டனைஇந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கணேசன் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட சண்முகத்துக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், செல்லமுத்துக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel