கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி கட்சி சார்பில் இன்று 'சலோ சன்சாத்' என்ற பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி போலீசார் விதித்திருந்த 163 தடை உத்தரவையும் மீறி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஜன்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி முன்னேற முயன்றனர்.
போலீசார் அமைத்திருந்த பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அங்கு நிலைமை மோசமடைந்தது. மேலும் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியையும் நடத்தினர்.
இந்த தடியடியின் போது, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இருந்த தங்களது கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை போலீசார் கைது செய்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
போலீசார் தங்களது மாணவர்களை வெறியோடு தாக்கியதாகவும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் சிஜேபி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், போலீசார் தரப்பில் வன்முறைக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதோடு, தடையை மீறியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.