ஊழல், சமரச அரசியல்: மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜியை விளாசிய சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க மாநில சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வரும், நிதியமைச்சருமான சுவேந்தி அதிகாரி பேசினார். அப்போது முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சமரசம் அரசியல், ஊழல் அரசியல், காவல்துறையை அரசியல் மயமாக்குதலை செய்ததாக மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
முத்திரை குத்தப்பட்ட ஒரு திருடர் (அபிஷேக் பார்னஜி எம்.பி.) நமக்கு பாடம் எடுக்கிறார். நீங்கள் உள்ளே இருப்பீர்களா அல்லது வெளியே இருப்பீர்களா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் நிலைமை ஃபால்டா சட்டமன்ற இடைத்தேர்தலின்போது போட்டியிலிருந்து விலகி ஓடிய அக்கட்சியின் செல்வாக்குமிக்க தலைவரான ஜஹாங்கீர் கானை (இவர் தன்னைத்தானே 'புஷ்பா' என்று அழைத்துக்கொண்டவர்) விட மோசமாக இருக்கும்.
இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் (மம்தா) மேற்கொண்ட அந்த வகையான சமரசம் செய்து கொள்ளும் அரசியல், அடிப்படைவாதிகளின் அரசியலை விடவும் மோசமானது. உங்கள் உண்மையான முகத்தை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு திருடன் என்பதை உங்கள் வாழ்நாளிலேயே நான் நிரூபிப்பேன்.
டிஎம்சி (TMC) ஆட்சியின் போது, கட்சியின் நலன்களுக்குப் பணியாற்றும் வகையில் காவல் துறை அரசியல்மயமாக்கப்பட்டது. அத்தகைய முயற்சிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள்.
பொதுமக்களின் குறைகள் தொடர்பாக டிஎம்சி (TMC) தலைவர்கள் மீது முட்டைகளை வீசுவதை நான் எதிர்க்கிறேன். ஆனால், பா.ஜ.க. தலைவர்கள் மீது கற்களை வீசியது டிஎம்சி-யினர்தான்.
அகதிகளை நாங்கள் வரவேற்போம். ஆனால் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம். 26,000 காவலர்கள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களில் 16,000 பேர் துர்கா பூஜைக்கு முன்பாகவே நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.