மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலின (SC) அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை தவிர்த்து, கிறித்தவம் அல்லது பிற மதங்களைத் தழுவிய நபர்களுக்கு எஸ்சி இடஒதுக்கீடு மற்றும் சான்றிதழ்கள் செல்லாது என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.
நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விசாரணையில்,
பட்டியலின வகுப்பினர் குறித்த 1950ஆம் ஆண்டின் அரசியலமைப்புஉத்தரவின்படி, இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.
பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்தும் அதன் அடிப்படையிலான சலுகைகளும் முடிவுக்கு வந்துவிடும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.
மதம் மாறிய ஒருவர் மீண்டும் தனது பழைய எஸ்சி அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால், பிறப்பால் அவர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சுயவிருப்பத்தின் பேரில் மீண்டும் தனது சொந்த மதத்திற்கு (இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம்) திரும்ப வேண்டும். அவரது மூல சாதி சமூகம் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு நிர்ணயித்துள்ள இந்த 3 முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே அவருக்கு மீண்டும் எஸ்சி அந்தஸ்து கிடைக்கும்" என தெரிவித்த அமர்வு, மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.