காமன்வெல்த்: ஒரே நாளில் 18 பதக்கம்..! 4-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.

8-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 23 பதக்கம் பெற்று இருந்தது. மீராபாய் சானு (பளு தூக்குதல்), ஷர்மிளா தன்கர் (பாரா குண்டு எறிதல்), திலீப் கவிட் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), அஸ்மிதா டே, ஹர்ஷ் சிங் (ஜூடோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.

தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, ரிஷி காந்த் சிங், ஞானேஸ்வரி யாதவ், அஜயா பாபு, ஹர் ஜிந்தர் கவுர், லவ்பிரீத்சிங் (பளு தூக்குதல்), சர்வேஷ் குஷாரே (உயரம் தாண்டுதல்), குல்வீர்சிங் (10 ஆயிரம் மீட்டர்), முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), முகமது பசில் (பாரா 100 மீட்டர் ஓட்டம்), யாமினி மவுரியா (ஜூடோ), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஜண்டு குமார் (பாரா வலு தூக்குதல்), பிந்த்யா ராணி தேவி (பளு தூக்குதல்), ஷில்பா ஷைலா (பாரா குண்டு எறிதல்), சீமா (வட்டு எறிதல்), தேஜஸ்வின் சங்கர் (டெகத்லான்), யஷ்வீர் சிங் (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று இருந்தனர்.

நேற்றைய 9-வது நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 16 பதக்கம் கிடைத்தது.

குத்துச்சண்டையில் 7 தங்கமும், 3 வெள்ளியும் கிடைத்தது. பிரீத்தி பவார், ஜாஸ்மின் லம்போரியா, சாக்‌ஷி சவுத்ரி, பிரியா கங்காஸ், அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் ஆகியோர் தங்கமும், லவ்லினா போர்கோஹைன், ஜடுமணி சிங், நரேந்தர் பெர்வால் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

பாரா ஆண்களுக்கான குண்டு எறிதலில் (எப் 57) சோமன் ரானா தங்கமும், இதே பிரிவில் சுபம் ஜூயல் வெள்ளியும் பெற்றனர்.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கலமும் கைப்பற்றினார்கள். ஜூடோவில் உனதி சர்மாவும், (பெண்கள் 63 கிலோ பிரிவு), 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங்கும் வெண்கலம் பெற்றனர்.

நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கம் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியது. இன்றுடன் போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் ஜூடோவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இஷ்ரூப் நரங் (பெண்கள் 78 கிலோ பிரிவு), அவ்தார் சிங் (100 கிலோ), யாஷ் கங்காஸ் (100 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) ஆகிய 3 பேர் பங்கேற்கிறார்கள். இதே போல சைக்கிளிங் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ஆஸ்திரேலியா 65 தங்கம், 41 வெள்ளி, 52 வெண்கலம் ஆகமொத்தம் 158 பதக்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 26 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், கனடா 18 தங்கம் உள்பட 59 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

கடைசி நாளில் 15 தங்கம் (டிராக் சைக்கிளிங் 6, ஜூடோ 4, லான் பவுல்ஸ் 4, நெட் பால்1 ) வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நிறைவு விழா நடைபெறுகிறது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel