தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்

ஒருங்கிணைந்த இந்தியா சுதந்திரத்தின் போது, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தது.

இந்த பிரிவினையின் போது துயருற்று தங்களது வாழ்வையும் உயிரையும் இழந்த மக்களின் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14 (இன்று) பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலாற்று ஆய்வுகளின்படி, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுக்கப்பட்டபோது சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.

மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) எல்லையான பஞ்சாபிலும், கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) எல்லையான மேற்கு வங்கத்திலும் மதக்கலவரங்கள் மூண்டன.

கொலை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு சொல்லொணா துயரங்கள் அரங்கேறின. இதன்போது ஏற்பட்ட மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14 இத்தினம் அனுசகரிக்கப்படும் என 2021 பிரதமர் மோடி அறிவித்திருந்தார். எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் பிரிவினையின் பின்னால் இருக்கும் துயரங்களை அரியச் செய்வதே இத்தினத்தின் நோக்கம்.

ஆகஸ்ட் 15 நாடு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு பின்னால் இப்படியோரு கருப்பு சரித்திரமும் இருப்பதை நினைவுக்கூற இந்நாள் அவசியமாகிறது.

இவ்வாண்டு பிரிவினை கொடுமைகள் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினையில் இன்னுயிரை இழந்தவர்களுக்கும் அத்தகு கொடூரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டோருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், "மக்களின் துணிச்சலும் பலமும், எப்பேர்ப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இலக்குகளை அடைய முடியும் என்பதை நிருபித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் நாம் மேலும் வலுப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel