2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில் ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்

தெற்கு ரெயில்வேயில் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.13,778 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரெயில்வே பாதுகாப்புப் படையினரின் கலாசார நிகழ்ச்சிகள், ரெயில்வே பாதுகாப்புப் படை மோப்ப நாய்கள் சாகசம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி.அருள் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பொதுமேலாளர் சுப்பாராவ் பேசியதாவது:-

தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2025-26) ரூ.13 ஆயிரத்து 778 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.84 சதவீதம் அதிகமாகும். 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.

இதேபோல, கடந்த நிதியாண்டில் 76.76 கோடி பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.7 சதவீத வளர்ச்சியாகும்.

39 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 7,550 சிறப்பு ரெயில்கள் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. 100 ரெயில்களில் நிரந்தரமாக 121 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

31 ஜோடி ரெயில்கள் இலகுரக பெட்டிகளாக (எல்.எச்.பி.) மாற்றப்பட்டுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 95 ரெயில் நிலையங்களில் 33 ரெயில் நிலையங்கள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 13 முக்கிய நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

224 கிலோமீட்டர் வரையில் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மின்மயமாக்கலை 98 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஆர்.ஆர்.பி., ஆர்.ஆர்.சி., சி.ஜி.ஏ., உள்ளிட்ட தேர்வுகள் மூலம் சுமார் 3 ஆயிரம் பேர் ரெயில்வே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மூலம் கடந்த ஆண்டில் 1,532 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.4.87 கோடி மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரூ.15.77 கோடி மதிப்பி லான காணாமல் போன உடமைகள் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரூ.23.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 250 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel