தனியாக வசிக்கும் பெண்கள் தான் குறி.. மைனர் மகனுடன் சேர்ந்து கொலைகளை அரங்கேற்றிய சீரியல் கில்லர் தாய்
தெலங்கானாவின் சித்திபேட் பகுதியில் தாயும் மைனர் மகனும் சேர்ந்து தனியே வாழும் பெண்களை குறிவைத்து தொடர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
துப்பாக் மண்டலத்தில் உள்ள ராமக்கபேட் கிராமத்திற்கு வெளியே ஒரு விவசாய நிலத்தில், பூபள்ளியைச் சேர்ந்த விஜயா என்பவரின் பாதி எரிந்த சடலத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி காவல்துறையினர் மீட்டனர்.
சித்திபேட் காவல்துறை ஆணையர் ரேஷ்மி பெருமாள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் விபரங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் நடந்த அன்று மாலை பூபள்ளியை சேர்ந்த சக்கலி ரஜிதா (38) என்பவரது மாளிகைக் கடைக்குள் விஜயா செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. மேலும் அவர்கள் விஜயாவின் உடலுடன் பைக்கில் செல்லும் காட்சிகளும் கிடைத்தன.
இதன் அடிப்படையில் ரஜிதாவையும் அவரது மைனர் மகனையும் விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
தனியாக வாழ்ந்து வந்த விஜயாவை ரஜிதா மற்றும் அவரது மைனர் மகன் தங்கள் மளிகைக் கடைக்கு வந்தபோது மூச்சுத் திணறச் செய்து கொன்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் சடலத்தைப் பைக்கில் ஏற்றிச் சென்று ராமக்கபேட் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
விசாரணை செய்ததில், அவர்கள் முன்னதாக செய்த மற்ற குற்றங்களும் அம்பலமாயின.
மே 28 அன்று, பூபள்ளி குவாட்டர்ஸில் தனியே வசித்து வந்த குந்தா ரேகா என்ற பெண்ணைக் கொலை செய்து, அவரது சடலத்தை அச்சமய்யப்பள்ளி வனப்பகுதிக்குக் கொண்டு சென்று எரித்துள்ளனர்.
2025 ஜூன் மாதம், காலை நடைப்பயிற்சி சென்ற பூபள்ளியைச் சேர்ந்த அன்னபூர்ணா என்பவரைதாக்கி, அவரது தங்க தாலியை பறித்துச் சென்றுள்ளனர்.
ரஜிதா டீக் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலை மற்றும் குடும்பப் பின்னணியைக் கூர்ந்து கவனித்துள்ளனர்.
முக்கியமாக தனிமையில் வாழ்பவர்கள் அல்லது குடும்பப் பிரச்சனை உள்ள பெண்களையே இலக்காகக் கொண்டுள்ளனர்.
இவர்களைக் கொன்றால் சந்தேகம் மற்றவர்கள் மீது திரும்பும் எனக் கணக்கிட்டுச் செயல்பட்டுள்ளனர்.
ரஜிதாவின் கணவர் உட்பட மேலும் 4 பேரைக் கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றவாளிகளிடமிருந்து தங்க, வெள்ளி நகைகள், ரூ.1.03 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள், சடலத்தை கடத்தப் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது ரஜிதா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மைனர் மகன்அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.