நேபாள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்தது - மீட்பு பணிகளில் தொடர் சிக்கல்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது. ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச உதவிகள் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் 1,003 பேர் உயிரிழந்ததை நேபாள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 3,900-க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் ஏதும் இல்லை.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை சுமார் 10,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும், இடிபாடுகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும் இப்பணிகளில் சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், அடையாளம் காணப்படாத உயிரிழந்தவர்களின் உடல்களைக் கூட்டு முறையில் அடக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சித்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் சுமார் 200 உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
உடல்கள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாலும், அவற்றை நகர்ப்பகுதிக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்ததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
உயிரிழந்தவர்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டால் உடல்களை மீண்டும் தோண்டி எடுக்க ஏதுவாக, டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடக்க இடமும் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் பலர் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முன்வருகின்றனர்; காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். ரத்த இருப்பு குறைந்து வருவதாகவும், கூடுதல் தானங்களை மருத்துவமனை கோருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ பொருட்களும் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லையின் சீனப் பகுதியில், 16 பேர் உயிரிழந்ததாகவும், 540-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 65,000 பேருக்குத் தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு தொடர்பான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், சுமார் 10,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவி தேவைப்படுவதாகவும், 5 வயதுக்குட்பட்ட 2,600 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான (severe wasting) சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel