தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வரைபடக் காலனித்துவம்: ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தை ஏற்க கோரிக்கை - ஐ.நா.-வில் இன்று வாக்கெடுப்பு!

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பு அளவை துல்லியமாகக் காட்டும் 'ஈக்வல் எர்த்' (சமமான புவி வரைப்பட திட்டம்) உலக வரைபடத்தை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்வதற்கான வரைவுத் தீர்மானம் மீது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்தத் தீர்மானம் டோகோவால் முன்மொழியப்பட்டதாகவும், ஆப்பிரிக்க ஒன்றியம் உட்பட மற்ற உலக நாடுகள் பலவும் இந்த வரைவு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக டோகோவின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“இந்த விவாதம் ஒரு அரசியல் விவாதம் அல்ல, மாறாக ஒரு அறிவியல் விவாதம். ஏனெனில், அறிவியல் சான்றுகள் உள்ளன. எனவே, நாம் அனைவரும் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

மாலுமிகள் கடல் வழி பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில், தற்போது இருக்கும் உலக வரைபட அமைப்பு, 1569-ஆம் ஆண்டில் ஃபிளெமிஷ் நிலப்படவியலாளரான ஜெரார்டஸ் மெர்கேட்டரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகும், இதுவே உலகளாவிய தரநிலையாகத் தொடர்கிறது.

இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் அதன் உண்மையான அளவைவிட கணிசமாகச் சிறியதாகத் தோன்றுகின்றன, அதேசமயம் உயர் அட்சரேகைப் பகுதிகள் மிகவும் பெரியதாகக் காட்சியளிக்கின்றன.

உதாரணத்திற்கு, வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் இருப்பது போல் தோன்றும்; ஆனால், உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது ஆகும்.

2018 இல் வரைபடவியலாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட ‘ஈக்வல் எர்த்’ என்ற புதிய வரைபடம், அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும் அதன் உண்மையான ஒப்பீட்டு அளவில் துல்லியமாகக் காட்டுகிறது.

பலரும் இதனை காலனித்துவ மனப்பான்மை என்றும் விமர்சிக்கின்றனர். மெர்கேட்டர் வரைபட முறை, மேற்கத்திய நாடுகள் சார்ந்த ஒரே மாதிரியான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று வரலாற்றாசிரியர்களும் புவியியலாளர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்களும் இதையே வழிமொழிந்துள்ளதுடன், சிலர் இதற்கு 'வரைபட ரீதியிலான காலனித்துவம்' (Cartographic colonialism) என்றும் பெயரிட்டுள்ளனர்.

ஆப்பிரிக்கத் தலைவர்களின் கருத்துப்படி, இது வெறும் வரைபடம் சார்ந்த விவாதம் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவின் உலகளாவிய நிலையைச் சுருக்கிக் காட்டுகிறது. அதாவது சர்வதேச அதிகார இயக்கவியலை நுட்பமாக வடிவமைத்துள்ளது.

இது, சர்வதேச வர்த்தகம், வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் கல்வி கட்டமைப்புகளில் உள்ள அமைப்பு ரீதியான சார்புகளை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இப்போது ‘சமமான பூமி’ வரைபடத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆப்பிரிக்கா குறித்த கண்ணோட்டங்கள் மாறும் என வாதிடுகின்றனர்.

உலகளவில் ஐ.நா. தீர்மானங்கள் அமல்படுத்த முடியாதவை என்றாலும், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆளுகை ஆகியவற்றில் மெர்கேட்டர் வரைபடம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்த வாக்கெடுப்பு நிறைவேறினால் அது வகுப்பறைப் பாடத்திட்டங்களையும் அன்றாடத் தொழில்நுட்பத்தையும் புதுப்பிக்க வழிவகுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel